அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தால் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தயார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“நான் யாரிடமும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கவில்லை. ஆனால் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அவ்வாறு கோரிக்கை வைத்தால் அதை நடைமுறைப்படுத்துவேன்.
அண்மையில் என்னுடன் சில ஊடகவியலாளர்கள் வந்து உரையாடினார்கள். பல்வேறுபட்ட கேள்விகளை கேட்டார்கள் நான் பதிலளித்திருந்தேன்.
அப்போது தான் அவர்கள் தமிழ் மக்கள் சார்பில் யாராவது ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவது தொடர்பாக கூறியிருந்தனர்.
அத்துடன் என்னைக் களமிறங்குமாறு ஏனைய கட்சிகள் கேட்டால் எனது நிலைப்பாடு குறித்தும் கேட்டார்கள்.
அதற்குத்தான் நான் அனைத்துக் கட்சியினரும் என்னை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு கூறினால் நான் அதை செயற்படுத்துவேன் என கூறினேன்.
தவிர எந்த சந்தர்ப்பத்திலும் நான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க உள்ளேன் என தெரிவிக்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.